நிச்சயமாக தொழில் கிடைக்கூடியது பல்கலைக்கழகமா? கல்வியியற் கல்லூரியா?
இந்தக் கேள்வி, ஒவ்வொருவரது தனிப்பட்ட இலக்கு, திறமை, விருப்பம் என்பவற்றைப் பொறுத்து அணுகப்பட வேண்டிய ஒன்றாகும்.
முதலில் உங்கள் இலக்கு என்ன என்பதைத் தீர்மானியுங்கள். உங்களால் என்ன முடியும் என்று சிந்தியுங்கள். உங்களது விருப்பம் என்ன என்பதை அடையாளங் காணுங்கள்.
பல்கலைக்கழகம் மற்றும் கல்வியியற் கல்லூரி ஆகிய இரண்டும் மிகவும் பெறுமதியான கல்வி நிறுவனங்கள். அவற்றில் கற்பதில் நன்மைகள் பல உள்ளன. சில பிரதிகூலங்களும் இருக்கின்றன. அவற்றை சுருக்கமாக உங்களுக்குத் தருகிறேன்.
இவற்றை நன்கு அவதானித்து உங்களுக்கான எதிர்கால கல்வி நிறுவனத்தைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
பல்கலைக்கழகத்தில் பயில்வதால் கிடைக்கும் நன்மைகள்
............................
பல்கலைக்கழகத்தில் இணைவதன் மூலம் உங்களுக்கு பின்வரும் நன்மைகள் கிடைக்கும்.
(01) பரந்துபட்ட வாய்ப்புகள்:
பல்கலைக்கழகத்தில் பயின்று வருபவர்கள் கல்வித் துறையிலோ ஏனைய துறைகளிலோ பணியாற்ற முடியும். அதேபோன்று கல்வி சார்ந்த கற்கை நெறிகளையோ ஏனைய கற்கை நெறிகளையோ தமது விருப்பத்திற்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக் கற்க முடியும்.
(02) கட்டுப்பாடு இன்மை:
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானவர்கள் கட்டாயம் தொடர்ந்து படிக்க வேண்டுமென்றோ, படித்து முடிந்த பிற்பாடு கட்டாயம் குறிப்பிட்ட ஒரு துறையில் குறிப்பிட்ட காலம் சேவையாற்ற வேண்டுமென்றோ எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.
(03) உதவித் தொகைகள்:
பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானவர்களுக்கு கற்றலுக்கான உதவியாக மகாபொல, பேர்சரி என்ற பெயர்களில் சிறு நிதியுதவிகள் வழங்கப்படும். அது கற்றல் காலங்களில் ஏற்படும் செலவின் ஒரு பகுதியை ஈடு செய்யப் பெரிதும் உதவியாக இருக்கும்.
(04) உயர்கல்வி வாய்ப்புகள்:
இங்கு கற்பவர்கள் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டவர்களாவர். மேலும், பல்கலைக்கழக விரிவுரையாளர் என்ற உயர் பதவிகளைப் பெற வேண்டுமானால், பல்கலைக்கழகத்தில் கற்று நல்ல பெறுபேறுகளைப் பெற்றவர்களுக்கே அது சாத்தியமாகும்.
(05) சுதந்திரம்:
இங்கு கற்பவர்களுக்கு நடைமுறைக் கட்டுப்பாடுகள் மிகவும் குறைவு. பாடநேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் குறிப்பாக மாலை நேரங்களில் அவர்கள் சுதந்திரமாக உலவ அனுமதியுண்டு.
அதேவேளை, பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று வருபவர்களுக்கு தொழில்வாய்ப்பு என்பது உறுதியற்றதாக இருக்கின்றது.
தொழில்வாய்ப்புகளைப் பெறுவதற்காக தொடர்ந்து போட்டிப் பரீட்சைகளுக்குத் தோற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. இதற்காக தொடர்ந்து கற்றுக் கொண்டும் அதற்காக செலவிட்டுக் கொண்டும் இருக்க வேண்டிய நிலை உருவாகின்றது.
மேலும் கற்றலுக்கான செலவு அதிகமாக இருக்கின்றமை, நீண்ட காலப் பாடநெறிகள் காரணமாக அதிக காலங்கள் செலவாகின்றமை, கட்டுப்பாடற்ற நிலை சில நேரங்களில் ஆபத்துகளைத் தோற்றுவிக்கின்றமை போன்ற தீமைகளும் இங்கு காணப்படுகின்றன.
கல்வியியற் கல்லூரியில் பயில்வதால் கிடைக்கும் நன்மைகள்
............................
கல்வியியற் கல்லூரியில் இணைவதன் மூலம் உங்களுக்கு பின்வரும் நன்மைகள் கிடைக்கும்.
(01) உறுதியான அரசாங்க வேலை வாய்ப்பு:
இங்கு கற்று டிப்ளோமா பட்டம் பெறுபவர்கள் விரைவில் அரசாங்கப் பாடசாலையொன்றில் ஆசிரியராக நியமிக்கப்படுவார்கள். இது ஓய்வூதியமுள்ள நிரந்தர அரச உத்தியோகமாகும்.
(02) ஆசிரியர் சேவையில் பணியாற்றும் வாய்ப்பு:
ஆசிரியர் சேவை என்பது நல்ல மனிதர்களை உருவாக்கும் ஓர் அறப்பணி. இப்பணியில் இணைவதன் மூலம் சமூகத்தில் மரியாதை, நிலையான வருமானம் என்பன கிடைக்கும். ஏனைய பணிகளுடன் ஒப்பிடும் போது நாளாந்தம் வேலை செய்யும் நேரம் குறைவு. தவணை விடுமுறைகளும் உண்டு. குறிப்பாக பெண்கள் மிகவும் விரும்பும் ஒரு சேவைத்துறை.
(03) கற்றல் செலவு இன்மை:
கல்லூரியில் பயிற்சி பெறுகின்ற காலங்களில் எவ்வித கொடுப்பனவும் செலுத்த வேண்டியதில்லை. உணவும் தங்குமிடமும் அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும். அத்தோடு மூன்றாவது வருடத்தில் பாடசாலையொன்றில் கட்டுறுப் பயிற்சிக்காக இணைக்கப்படும் போது அதற்காக ஒரு தொகைப் பணம் சிறு ஊதியமாக வழங்கப்படும்.
(04) போட்டித் தன்மை இன்மை:
மேலும் கல்வியியற் கல்லூரியில் கற்ற பிற்பாடு எவ்விதமான போட்டிப் பரீட்சைகளும் இன்றியே வேலை வாய்ப்பும் கிடைக்கும்.
(04) கல்வித் துறையில் கற்க சலுகைகள்:
கல்வியியற் கல்லூரிகளில் பயின்றவர்கள் இரண்டு வருடங்களில் “கல்விமானி” எனப்படும் B.Ed பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்யும் சலுகையைப் பெறுகின்றனர். தேசிய கல்வி நிறுவகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் என்பன இவ்வாறான சலுகை அடிப்படையில் கற்கை நெறிகளை வழங்குகின்றன.
(05) பாதுகாப்பான சூழல்:
இங்கு கற்பவர்களுக்கு பாதுகாப்பான சூழலும் ஒழுங்கு முறையான நேர அட்டவணையும் உண்டு. வெளிச்சூழலின் தாக்கங்களிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும்.
அதேவேளை கல்வியியற் கல்லூரியில் பயின்று வருபவர்கள் கல்வித் துறையில் மட்டுமே பணியாற்றும் நிலை இருக்கிறது.
மேலும், கல்லூரியில் இணைந்து கொண்ட பின் நடுவில் படிப்பை இடைநிறுத்த முடியாது. அவ்வாறு இடைநிறுத்தினால் அதற்கான நட்ட ஈடாக பெருந்தொகைப் பணத்தை அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டி வரும்.
அதேபோன்று, கல்லூரியில் பயின்று முடித்த பின், 5 வருடங்கள் கட்டாயம் பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணியாற்ற வேண்டும். இடையில் தொழிலை விட முடியாது.
சில நேரங்களில் கல்லூரியில் இருக்கின்ற கட்டுப்பாடான சூழல் சிலருக்கு மிகவும் இறுக்கமான வாழ்க்கை போன்று தோன்றலாம்.
எனவே, உங்களது இலக்கு, விருப்பம், இயலுமை போன்றவற்றைக் கருத்திற் கொண்டு உங்களது கற்றல் தளத்தைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
எம்.யூ.எம். ஸபீர்
விரிவுரையாளர்
தர்காநகர் தேசிய கல்வியியற் கல்லூரி

0 கருத்துகள்