கல்வி மறுசீரமைப்பு பிற்போடப்பட்டமை புயலின் தாக்கத்தை விட மோசமானது.
கல்வி ஒரு நாட்டின் உயிர்நாடி , ஒழுங்கான கல்வி இல்லாத நாடு ஒழுங்கற்ற மனிதர்களையே எப்பொழுதும் உருவாக்கும் கல்வியின் தரமே நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
2022 ஆம் ஆண்டு தேசிய கல்வி நிறுவனத்தில் பின்லாந்து நாட்டு பேராசிரியர்களால் நடத்தப்படும் பல நாட்கள் கொண்ட ஒரு
அமர்வில் கலந்து கொண்டேன். கல்வி மறுசீரமைப்பின் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் ஆரம்பகட்ட பயிற்சி கலந்துரையாடலாக அது காணப்பட்டது.
பல்வேறு கற்பித்தல் முறைகளை இலங்கையில் அறிமுகப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடிய போது நான் அவரிடம் ஒரு வினாவை தொடுத்தேன். குறிப்பாக பேராசிரியர் பெட்கா அவர்களிடம் நவீன வசதிகள் அற்ற எமது நாட்டில் டிஜிட்டல் லிட்ரஸி(Digital Literacy) கொண்ட இந்த முறைமையை அறிமுகப்படுத்துவது எவ்வாறு சாத்தியமானது என வினவினேன் .அதற்கு அவர் நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் உங்கள் நாடு ஏற்கனவே பல தசாப்தங்கள் முன்னேற்றத்தில் பின்தங்கி உள்ளது. நீங்கள் முடியுமான இடத்தில் ஆரம்பியுங்கள் எல்லா இடங்களிலும் ஆரம்பிப்பது கடினமாக இருக்கும் நீங்கள் இதை பிற்போடும் அளவுக்கு உங்கள் நாடு தொடர்ந்து பின்தங்கிய நாடாகவே இருக்கும் என குறிப்பிட்டார்.
அவர் பின்வரும் கற்பித்தல் முறைகள் தொடர்பில் ஆசிரியர் பயிற்சி நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை கவனம் எடுத்துப் பேசினார்
1.Blended Learning 2. Inquire based Learning 3.Project Base Learning 4.Problem base Learning 5.Authentic Learning.
இந்த கற்பித்தல் கற்றல் முறைகள் நவீன உலகத்தின் மிக முக்கியமான முறைகள் ஆகும். உலகம் மிக வேகமாக தொழில்நுட்பத்துடன் முன்னேறுகிறது எங்களில் பலருக்கு AI மட்டுமே தெரியும் Augmented Reality (AU). Virtual Reality (VR) பற்றி தெரியாது தொழில்நுட்பம் நாளுக்கு நாள் இற்றைப் படுத்தப்படுகிறது இற்றைப்படுத்தல் இல்லாத கல்வி ஒருபோதும் நாட்டின் அபிவிருத்திக்கு கை கொடுக்காது.
அந்த நிகழ்வின் இறுதியில் நவீன முறைகளுடன் ஒரு பாடத்தை செய்து காட்டுமாறு எம்மிடம் வேண்டினார் எங்களில் பலர் பின் தங்கிய போது பேராசிரியர் அசோகா எனக்கு அதைச் செய்யுமாறு வேண்டினார் .அந்த வகையில் விசைகளின் சமனிலை என்னும் பாடத்தை ஹோமாகம மஹிந்த ராஜபக்ச கல்லூரியில் தரம் 10 மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப உபகரணப் பயன்பாட்டுடன் செய்தேன். அந்தப் பாடத்தை முடித்த பின்பே நான் உணர்ந்தேன் இது இலங்கையில் சாத்தியமானது எமது மாணவர்களின் துலங்கள் மிகவும் அருமையாக இருந்தது.
பின்பு பேராசிரியர் அசோக் அவர்கள் எனது பாடத்தை ஒரு ஆய்வுக் கட்டுரையாக தேசிய கல்வி நிறுவனத்தில் முன்வைத்தார்.
இந்தக் கல்வி முறைமை பல ஆய்வுகள் பல பைலட் செயற்பாடுகள் ,நீண்ட கலந்துரையாடலின் பின்பு சேதனக் கூர்ப்பு அடைந்து வந்த கல்வி முறையாகும்.
கடந்த நான்கு மாதங்களில் கிட்டத்தட்ட 600 விஞ்ஞான ஆசிரியர்களை பயிற்றுவிப்பதில் நான் பங்கேற்று உள்ளேன் .அதில் முக்காவாசி பேர் சிங்கள மொழிமூல ஆசிரியர்கள் சகல ஆசிரியர்களும் இந்த கல்விமுறை தொடர்பாக மிகவும் நேரான மனப்பதிவுடனே சென்றனர்.
அத்துடன் 113 அதிபர்களுக்கும்,123 கணிப்பீட்டுப் பொறுப்பான ஆசிரியர்களுக்கும் இந்த கல்விமுறையில் கணிப்பீட்டு முறை தொடர்பில் பயிற்சிகளை மேற்கொண்டேன். அந்த அதிபர்களும் ஆசிரியர்களும் இந்த கல்விமுறை தொடர்பாக ஒரு நேரான மனப்பதிவு கொண்டவர்களாகவே காணப்பட்டனர்.
அரசின் இந்த முடிவு கல்வியாலளர்கள் மட்டத்தில் பலத்த அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றது. அரசின் மீது இருந்த நம்பிக்கையும் குறைந்துள்ளது.
அரசு ஒரு விடயத்தை தெளிவாக உணர வேண்டும் தொழிற்சங்கங்களுக்கு கல்வி அமைச்சை நடத்துவதற்கு இடம் கொடுக்க முடியாது. தொழிற்சங்கங்கள் இருப்பது கல்வியின் கொள்கைகளை வகுப்பதற்கு அல்ல அது கல்வியாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு மட்டுமே அவை அவை அவைகளின் பணியை செய்ய வேண்டும் அழுத்தங்களுக்கு அடிபணியாத தேசிய கல்வி முறைமை ஒன்று அமைய வேண்டியது மிக முக்கியமானது.
கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிர்வாகமும், இலங்கை பரீட்சை திணைக்களமும் மூன்று சமாந்தர கோடுகளில் பயணிக்க முடியாது அவையெல்லாம் ஒரு நிழலில் கொண்டுவரப்பட வேண்டும்.
இந்தக் கல்வி முறையால் டியூஷன் ஆசிரியர்களின் வருமானம் பெருமளவுக்கு பாதிக்கப்படுகிறது .எனக்கு ஒரு நியாயமான சந்தேகம் இருக்கிறது பாரிய அளவில் டியூஷன் செய்யும் சில கல்வி வியாபாரிகள் இதை தடுப்பதில் முன் நிற்கிறார்களா ?என்ற ஒரு ஆழ்மன சந்தேகம் காணப்படுகிறது. மக்கள் இந்த விடயத்தில் அரசிடம் வினா கேட்பது மிகவும் கட்டாயமானது ஏன் இவ்வாறு செய்தீர்கள் என்பதை அரசு கட்டாயம் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
எம்.என் முஹம்மத்.
0 கருத்துகள்