இலங்கை கல்வி நிர்வாகப் சேவை (SLEAS) பரீட்சையும் அவை பற்றிய தெளிவும்

இலங்கை கல்வி நிர்வாகப்  சேவை (SLEAS) பரீட்சையும் அவை பற்றிய தெளிவும்  

(பரீட்சை ஊடாக தெரிவுக்குள்ளாகுவதற்கு எதிர்பார்த்திருக்கும் அனைவருக்கும்.)

"மேலும் பரீட்சையில் 'சித்தியடைதல்' என்பதை விட 'தெரிவுக்குள்ளாகுதல்' என்ற அடிப்படையை வைத்தே பரீட்சை எழுதுவோர் தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். 40 புள்ளிகள் எடுத்தால் சித்தி என்பது இதரமானிப்பட்டம். 50 புள்ளிகள் எடுத்தால் சித்தி என்பது முதுமானிப் பட்டம். இது இரண்டையும் சித்தியடைந்தவர்கள் இப்பரீட்சைக்குத் தோற்றி 75 புள்ளிகள் எடுத்தாலும் தெரிவு செய்யப்படுவாரா? என்பதை உறுதிப்படுத்த முடியாது. எனவே, எத்தனை பேர் தெரிவு செய்யப்படுவர் என்பதை விடுத்து, "நான் தெரிவுக்குள்ளாக வேண்டும்" என்ற இடையிறாத கடும் முன்னாயத்தமும் உங்கள் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்."

1. அறிமுகவுரை:

இலங்கையின் கல்வித் துறையில் அதியுயர் சேவையாக உள்ள "இலங்கை கல்வி நிர்வாக சேவை" யின் (Sri Lanka Education Administrative Service) வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்வதற்கான போட்டிப் பரீட்சை மிக அண்மையில் நடைபெறவுள்ளது. கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தராக இருப்பவர் எவ்வாறான ஆற்றல்களையும் திறன்களையும் கொண்டிருக்க வேண்டும் என்பது தொடர்பில் தீர்மானம் மிக்க ஒன்றாக இப்பரீட்சை விளங்குகிறது. பல்கலைக்கழக கற்கை நெறிகளுடன் கல்வித்துறையில் பயிற்சி பெற்று, கற்பித்தலில் பல அனுபவங்களையும் பெற்று, நிர்வாக ஆற்றலையும் அனுபவ ரீதியாகவும் பெற்றிருக்கும் ஒருவர் இப்பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெறுவதன் மூலம் அத்திறனை நிரூபித்துக்காட்டி, கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தராகத் தெரிவுக்கப்பட வேண்டிய நிலை காணப்படுகின்றது.

இந்த ஆட்சேர்ப்பு தொடர்பில் திறந்த போட்டிப் பரீட்சை (Open Competitive Examination), மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை (Limited Competitive Examination), திறன் மற்றும் அனுபவ அடிப்படை (Basis of Service Experience and Merit) என மூன்று முறைகள் பின்பற்றப்படுகின்றன. மேலும், பொதுப் பதவியணி (General Cadre), விசேட பதவியணி (Special Cadre) என இரு பதவியணிகள் தெரிவு செய்யப்படுகின்றன. ஆட்சேர்ப்பு முறையின் கீழ் எழுத்துப்பரீட்சை (Written Examination), வாய்மொழிப் பரீட்சை (Viva Voce Test) ஆகிய இரண்டும் ஒருவர் தெரிவுக்குள்ளாவது பற்றி முடிவு செய்கின்றன.

எனவே இப்பரீட்சைக்குத் தோற்றுகின்ற சம தகைமையும், அனுபவமும், ஆற்றலுமுடைய ஆயிரக்கணக்கான பரிசாத்திகளிலிருந்து மிக வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையான கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்களைத் தெரிவு செய்ய வேண்டிய தேவையின் விளைவே இப்பரீட்சையாகும்.

இலங்கை கல்வி நிர்வாக சேவைப் பரீட்சைக்குத் தோற்றும் ஒருவர் முதலில் குறித்த பரீட்சையின் கனதியான தன்மை மற்றும் தெரிவு செய்யப்படும் விதத்தினை பழுமறைகள், அதன் முக்கியத்துவம், அப்பரீட்சையில் சித்தியடைந்து தெரிவு செய்யப்படுவதன் மூலம் கிடைக்கின்ற கடமைப் பொறுப்புக்கள் மற்றும் கல்விப் புலத்துக்கு அதனூடாக ஆற்றக்கூடிய அபிவிருத்திப் பணிகள், அதற்கேற்றவாறு வினாத்தாள்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் (Duration) அதிகூடியளவுக்குச் சரியான விடைகளை அளிப்பது தொடர்பில் கையாள வேண்டிய நுட்பங்கள் ஆகியன தொடர்பில் ஒரு நம்பிக்கைத் தன்மையை மனதில் இருத்திக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இது பரீட்சையை அணுகுவதற்கான முதலாவது அம்சமாகும்.

கல்விப் புலத்தின் உயர், அதியுயர் மட்டங்களில் விரைவானதும், சரியானததமான தீர்மானங்களைக் குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் பெரும் பான்மையோர் ஏற்கக்கூடிய வகையில் எடுக்கக்கூடிய ஆற்றல் ஒரு கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தருக்கு அவசியமாகிறது. நடைமுறையில் பிரச்சினைகளை வேகமாக விளங்கிக் கொள்ளுதல், பிரச்சினைகளை அவதானத்தின் அடிப்படையில் அனுமானித்தும் பொருத்தமான விளக்கத்தைப் பெறுதல், உரிய நேரத்தில் வேகமாகவும் சரிமாகவும் முடிவெடுத்தல், தீர்மானங்களின் நடைமுறை சார்ந்ததும் எதிர்காலம் சார்ந்த நுட்பமான விளைவுகளை (எதிர்வுக்கூறல் திறன்) அறிந்து செயற்படுதல் ஆகிய திறன்கள் இவ்வாறு தெரிவு செய்யப்படும் மேல்நிலை உத்தியோகத்தரிடம் எதிர்பார்க்கப்படுபவையாகும்.

எனவேதான் கிரகித்தல், நுண்ணறிவு, உளச்சார்பு மற்றும் கல்வி முகாமைத்துவம், நிர்வாக எண்ணக்கருக்கள் பற்றிய நுணுக்கமான அறிவு என்பன எழுத்துப் பரீட்சைக்கான வினாத்தாள்களாக ஆக்கப்பட்டுள்ளன. அதேவேளை கல்வித்துறை மற்றும் கல்வி நிர்வாகம் சார்ந்த பல்வேறு பதவிப் பயிற்சிகளிலும் பெறுகின்ற நேர்த்தியான அறிவும் அனுபவமும் சேர்ந்த தனிப்பட்ட சுபாவங்களுக்கப்பாலுப்பட்ட சிந்தனைகள் இதற்கு அடித்தளமாக அமையக்கூடியனவாகும்.

விடயங்களைச் சரியாகத் தெரிந்திருப்பது ஒன்று. இது கோட்பாட்டுரவு. தெரிந்து கொண்ட அறிவினை வைத்துக் காரியங்களை முறையாகவும் சரியாகவும், பெரும்பான்மையோர் ஏற்கக்கூடிய வகையிலும் ஆற்றுவதற்கான திறன் இன்னொன்று. பின்னையது முன்னையதிலிருந்து உருவாக்கப்படுவதாகும்.

எனவே கோட்பாட்டறிவைக் குறித்த சந்தர்ப்பத்தில் எவ்வாறு பிரயோகிப்பது என்பதைத் தெளிவுபடுத்தும் வகையிலும் நீங்கள் ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும் என்பதும் இப்பரீட்சையின் மூலம் எதிர்பார்க்கப்படும் திறன்களில் ஒன்றாகும். முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான முகாமைத்துவ ஆற்றல் (Conflict Management) என்பது தனியான அடிப்படைத் திறனாகும். நடைமுறையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய முகாமைத்துவ நுட்ப அறிவினைப் பயன்படுத்தி நிறுவனத்தைக் கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்கும் பொருட்டு பௌதிக - மனித வளங்களை முறையாகவும், மனிதவியல் சார்ந்த வகையிலும் பயன்படுத்தித் தீர்க்கும் ஆளுமையும் அங்கு விடையளித்தலில் எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே இம்முறை நடத்தப்படவுள்ள பரீட்சை தொடர்பில் பரீட்சார்த்திகள் மிக நுணுக்கமாகவும் தெளிவாகவும் ஒழுங்குமுறையாகவும் விடையளிக்கக்கூடிய வகையில் தமது எழுத்துப் பரீட்சைக்கான ஆயத்தங்களைச் செய்து கொள்ள வேண்டும். விடயங்களை அறிந்து வைத்திருப்பது மட்டுமன்றி, உரிய நேரத்தில் உரியவாறு பதற்றமின்றி விடையளிக்கும் பயிற்சியே பரீட்சையை அணுகுவதற்கு இன்றியமையாதது. மூன்று வினாத்தாள்களிலும் பொருத்தமானதும் தரமானதுமான கற்றல் அனுபவங்கள் அவசியமாகும்.

கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையானது தகைமையுடையவர்கள் தோற்றும் பரீட்சை. ஆசிரியர்கள், அதிபர்கள் அல்லது பல்கலைக்கழகப் பட்டதாரிகள் அல்லது வேறு ஏதேனும் துறை சார்ந்தவர்களே இப்பரீட்சைக்குத் தோற்றுவார்கள். எவ்வாறு கற்பது? எவ்வாறு வினாக்களுக்கு விடையளிப்பது? போன்ற விடயங்களை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றவர்களாகிய ஆசிரியர்களும், அதிபர்களும் பட்டதாரிகளும் தோற்றுகின்ற பரீட்சை. மாணவர்கள் அங்கும் இங்கும் கற்பது போல, இவர்கள் கற்க முடியாது. எனவே தான் மூல ஆவணங்களைப் பெற்று அதிலிருந்து தகவல்களைப் பெறுவதே பரீட்சைகளுக்குப் பொருத்தமானது. மேலும் கடினமான பயிற்சிகள் மிகவும் அவசியமானவை. இப்பரீட்சையில் சித்தியடைவது என்பது 75% பரீட்சைக்குத் தோற்றுபவரைச் சார்ந்தது. அவரிடம் இருக்கும் நீண்டகால அறிவுச்சேமிப்பு இதற்கு கை கொடுக்கும். பல்துறை சார்ந்த வாசிப்புத் திறன், வாசிப்பினூடாக பெறுகின்ற சொல் அல்லது சொற்றொகுதியின் (Keywords) பொருளை விளங்கும் ஆற்றல், மொழி ஆளுகை மற்றும் தர்க்க அமைவுச் சிந்தனை என்பனவும் முறையாக விடையளிக்கக்கூடிய ஆற்றலை வழங்கும். மேலும், முகாமைத்துவ செயற்பாட்டறிவும் பரீட்சைக்குக் கை கொடுக்கும்.

எழுத்துப் பரீட்சையும் - தெரிவுப் பரீட்சையும்.

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் ஆட்சேர்ப்பு தொடர்பில் எழுத்துப் பரீட்சை (Written Examination), வாய்மொழிப் பரீட்சை (Viva Voce Test) ஆகிய இரு பள்ளியில் முறைகள் தெரிவின் பொருட்டுப் பயன்படுத்தப்படுகின்றது என மேலே குறிப்பிட்டதற்கமைவாக, பரீட்சார்த்திகள் முதலில் எழுத்துப் பரீட்சைக்கான மூன்று வினாத்தாள்களிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் வகையில் விடையளிக்க வேண்டும். மிக வேகமாகவும், சரியாகவும் தெளிவாகவும் விடையளிக்கும் ஆற்றலை உருவாக்குவது இப்பரீட்சையில் தேறுவதற்கான அடிப்படையாகும்.

• எழுத்துப்பரீட்சையில் உரிய புள்ளி மட்டத்தை அடைந்த ஒருவரின் ஆளுமையை மதிப்பீடு செய்யும் பொருட்டு வாய்மொழிப் பரீட்சை இடம்பெறுகின்றது. ஒருவரது தெரிவில் இது மிக முக்கியமான கட்டம். பரீட்சார்த்திகள் எழுத்துப் பரீட்சைக்குத் தகைமை பெற்ற பின்னர் இதற்குத் தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டியது மிக அவசியமான விடயம். எழுத்துப் பரீட்சை மட்டும் ஒருவரின் தெரிவினை ஒருபோதும் உறுதிப்படுத்தாது.

எழுத்துப் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட சிலர் வாய்மொழிப் பரீட்சையில் சரியாக செயற்படாததின் வாய்ப்பினை இழக்கக்கூடும். இது தொடர்பில் ஒருவரின் அனுபவங்கள் இன்னொருவருக்கு உதவும் என்ற வகையிலும் செயற்பட முடியாது. இது தனித்துவமானது. எழுத்துப் பரீட்சையில் தகைமை பெற்ற பரீட்சார்த்தி ஒருவர் வாய்மொழிப் பரீட்சையில் முக்கியமாக இரண்டு விடயங்களில் தனது கவனத்தைச் செலுத்தத் தயாராக வேண்டும். (இவை எழுத்துப் பரீட்சையில் நிர்ணயிக்கப்பட்ட தகுதி மட்டத்தை அடைந்த பின்னர் கவனிக்க வேண்டிய விடயம்).

(i) வாய்மொழிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்குரிய வகையில், வாய்மொழிப் பரீட்சைக் குழுவிடம் ஆட்சேர்ப்புக்குரிய அனைத்துத் தகைமைகளையும் நிரூபிக்கும் வகையில் தேவைப்படுத்தப்பட்ட, போதுமான ஆவணங்களை முறையாளர்கள் சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகளைப் பூர்த்தி செய்து வைத்திருத்தல் வேண்டும். சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான ஆவணக் குறைபாடுகள் மற்றும் முறையான உறுதிப்படுத்தலின்மை என்பன வாய்மொழிப் பரீட்சைக்குரிய தகைமையை இல்லாது செய்துவிடும் என்பதில் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும்.

(ii) வாய்மொழிப் பரீட்சைத் தினத்தில், முதற் செயற்பாடாக, ஆவணப் பரிசீலனைக் குழுவிடம் உரிய ஆவணங்களை முறையாகச் சமர்ப்பிக்குமாறு கேட்கப்படுவீர்கள். இக்குழு ஆவணப் பரிசீலனையில் திருப்தியடைந்தால் மட்டுமே, உடனடுத்து வாய்மொழிப் பரீட்சைக் குழு முன்னிலையில் பிரசன்னமாவதற்கு அனுமதிக்கப்படுவீர்கள்..

(iii) இதன் பின்னர், வாய்மொழிப் பரீட்சைக்குப் புள்ளிகளை வழங்குவதற்கான நியதிகளுக்கேற்ப நம்மை ஆயத்தப்படுத்தியவாறு குழு முன்னிலையில் பிரசன்னமாக வேண்டும். எச்சந்தர்ப்பத்திலும் பதற்றப்பட வேண்டியதில்லை. உங்களுக்கென ஒதுக்கப்பட்ட நேரம் உங்களுக்குரியது. தெளிவாகவும் நிதானமாகவும் குழு முன்னிலையில் விடையளிக்க வேண்டும். குறிப்பாக இவ்விடத்தில் கற்றல்/கற்பித்தல் எண்ணக்கருக்கள் பற்றிய தெளிவான விளக்கம், நியாயப்படுத்தும் திறன், பிரச்சினை தீர்த்தல் திறன், தொடர்பாடல் திறன் எள்பவற்றைப் பிரயோகிக்கக்கூடிய வகையிலான ஆளுமை தொடர்வில் குழு பரீட்சிப்பினை மேற்கொள்ளும். இது மிகவும் பூமையான நிலையிலும், ஒரு சீர்மைத் தன்மையை பேணும் வகையிலும் துறைசார் நிபுணத்துவம் கொண்டவர்களால் மேற்கொள்ளப்படும். எனவே பரீட்சார்த்திகள் எழுத்துப் பரீட்சை, வாய்மொழிப் பரீட்சை இரண்டிலும் தனது திறன்களை வெளிப்படுத்தித் தெரிவுக்குள்ளாவதை நிரூபிக்க வேண்டும்.

இவை தொடர்பான தெளிவான ஆலோசனைகள், வழிகாட்டல்கள் அடுத்து வரும் அறிவுறுத்தல் கட்டுரைகளில் தருவதற்கு முயற்சிக்கப்படும். பரீட்சைக்கான வினாத்தாள்கள் தொடர்பிலும் எவ்வாறான கற்றல் முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பது தொடர்பிலும் வழிகாட்டப்படும். பரீட்சைக்கு அண்மித்த வகையில் நேர்முக கருத்தரங்கு மூலம் விரிவு வழிகாட்டல்கள் வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

"உங்களில் நீங்கள் நம்பிக்கை வைத்தால் நீங்கள் நினைப்பதை விட அதிகமாகச் சாதிப்பீர்கள்."

SLEAS பரீட்சை வழிகாட்டல் - 02

வினாத்தாள்-1: கிரகித்தல்

"கிரகித்தல் வினாத்தாள் தொடர்பில் சுருக்கமாகவும் தெளிவாகவும் விடையளிப்பது எவ்வாறு? என்பது தொடர்பில் கிரகித்தல் வினாத்தாளுக்கேற்ப விளங்க முற்படுவது எனது நோக்கமாகும். அனுபவ அடிப்படையில், இவ் வினாத்தாள் ஒப்பீட்டு ரீதியில், நுண்ணறிவு வினாத்தாளைப் போன்று புள்ளிகளை இலகுவாகப் பெறக்கூடிய ஒன்றல்ல. கிரகித்தல் வினாத்தாளில் பரீட்சார்த்திகளால் வழங்கப்படும் விடைகளுக்கும் மதிப்பீட்டுக்குமிடையில் விடைகள் தொடர்பில் பாரிய இடைவெளிகள் காணப்படக்கூடியதாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இவ் வினாத்தாளில் தெளிவானதும், எழுத்துப்பிழைகளற்றதும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்டதுமான விடையளிப்பு மிகமிக முக்கியமானதாகும்."

இவ் வினாத்தாள், பரீட்சார்த்தி தோற்றுகின்ற மொழி தொடர்பான கிரகித்தல் (Comprehension) பற்றியதாகும். தொடர்பாடல் திறன் (Communication), சாராம்சப்படுத்துதல் (Summarization), விபரித்தல் (Interpretation), பகுப்பாய்வுத் திறன் மற்றும் படைப்பாற்றல் (Creation) ஆகியவற்றை அளவிடுவதற்காகத் தயாரிக்கப்பட்ட பூரண வினாக்களைக் கொண்டதாகும்.

தரப்பட்ட பந்தியின் மையக் கருத்தினை விளங்கிக் கொள்ளும் ஆற்றலைப் பரீட்சார்த்தி கொண்டுள்ளாரா? என்பதைப் பரிசீலிப்பதும், மொழி ஆற்றலைப் பரிசோதிப்பதும் இவ்வினாத்தாளின் நோக்கமாகும். இவ்வினாத்தாளுக்கு விடையளிப்பதற்கான காலம் 1½ மணித்தியாலங்களாகும். குறித்த காலப்பகுதிக்குள் வினாத்தாளில் தரப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிப்பதற்கான விரைவான பயிற்சி அவசியமாகும்.

பொதுவாக கிரகித்தல் வினாத்தாளில் தரப்படும் வினாக்களோடு தொடர்புடைய பந்திகள் மற்றும் சொற்றொடர்கள் பெரும்பாலும் தரமான சொல்லாட்சியுடையதாகவே தரப்பட்டிருக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆசிரியர்களின் விசேடத்துவம் பெற்ற பாடத்துறையுடன் தொடர்பில்லாத அல்லது அதிகளவுக்குப் பரீட்சையமில்லாத துறைகளுடன் சார்ந்ததாக இருக்கலாம். மெய்யியல், உளவியல், அறிவாராய்ச்சியியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொருளியல், அரசறிவியல், சமூகவியல், மானிடவியல், தொல்லாருளியல், விளையாட்டு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளிலும் தொடர்புபட்டதாக அமைந்திருக்கும்.

எனவே இவ்வினாத்தாளுக்கு விடையளிப்பதற்கான 'கிரகித்தல் திறனை' நேரடியாக எவரிடமும் கற்றுக் கொள்ள முடியாது. கிரகித்தல் திறனை வளர்ப்பதற்கான உபாயங்களையும், விடையளிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய நுட்பங்களையும் எடுத்துக் கூறலாம்.

எதிர்பார்க்கப்படும் வினாக்கள் புறவயமான வினாக்களாக இருக்கும் என்பது அவற்றுக்கு எதிர்பார்க்கப்படும் விடைகளின் தன்மையில் தங்கியுள்ளது. இவ் வினாத்தாள் மிகமிகத் தெளிவானதும், தேவையற்ற அலங்கரிப்புக்களைக் கொண்டிராததும், வரையறுக்கப்பட்ட சொற்களில் அல்லது வாக்கியங்களில் வெளிப்படுத்தும் வகையிலான விடைகளை எதிர்பார்க்கின்றது.

இவ்வினாத்தாளில் இதுவரை கடந்த கால வினாத்தாள்களைப் பின்பற்றியதாகவோ அல்லது வினா அமைப்புகள் மாறுபட்ட வகையிலோ அமையலாம்.

(i) தரப்பட்ட பந்தியைக் கிரகித்து அதன்கீழ் தரப்பட்டுள்ள வினாக்களுக்குப் பொருத்தமான விடையினை எழுதுதல்.

• முதலில் வினாக்களைக் கவனமாக வாசிக்க வேண்டும்.

• பின்னர் பந்தியை வாசிக்கும்போது அவ்வினாக்கானோடு தொடர்புடைய சந்தர்ப்பங்களை இனங்காண வேண்டும்.

• வாசிக்கும் போது தேவைக்கேற்றவாறு மிகச் சுருக்கமாகக் குறிப்பெடுக்கவும்.

• பொருத்தமான விடையை இனங்கண்டு குறிப்பிட வேண்டும்.

(ii) தரப்பட்டுள்ள பந்தியின் மையக்கருத்தினை ஒரு வாக்கியத்தில் எழுதுதல். - இது தொடர்பில் பின்வரும் விடயங்களை மனங்கொள்ள வேண்டும்.

• தரப்பட்ட பந்தியை மிகச் சரளமாக வாசித்து அதில் கூறப்பட்டுள்ள பிரதான விடயம் யாது என்பதை வரைறுத்துக் கொள்ள வேண்டும்.

• அமைக்கப்படும் தனி வாக்கியம் எழுவாய், பயனிலை உள்ளடக்கிய அர்த்தமுடைய வாக்கியமாக அமைய வேண்டும்.

• பந்தியின் மையக் கருத்து மாறக் கூடாது.

• குறித்த வாக்கியம் தெளிவான தொடர்ச்சித் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும்.

• இரண்டு பந்திகளோ அல்லது இரண்டு வாக்கியங்களோ தரப்படலாம். சுயமான ஒரு வாக்கியமாகவே எழுதப்பட வேண்டும். பந்திக்கொரு வாக்கியம் என எழுதக்கூடாது. (i), (ii) ஆகியன ஒன்றிணைந்த வினாக்களாகவோ, தனியாகவோ தரப்படலாம்.

(iii) அடையாளப்படுத்தப்பட்டுள்ள சொல் அல்லது சொற்றொடர் தொடர்பான விளக்கத்தினைப் பந்தியின் பொருளுக்கேற்ப விளக்குதல்.

• அடையாளப்படுத்தப்பட்டுள்ள சொல் அல்லது சொற்றொடர் தொடர்ப்பில் விளக்கமளிக்கும்போது குறித்த பந்திக்கமைவாக இடம்சார் கருத்துப்பெறும் வகையில் அமைக்க வேண்டும். பல்லுரைச் சொல்லாளுகை தொடர்பில் தனியான விளக்கம் நேரடி அறிவுறுத்தலில் வழங்கப்படலாம். கிரகித்தல் வினாத்தாளில் ஒரு தடவை தரப்பட்ட வினாவோ, பந்தியோ, சொல் அல்லது சொற்றொகுதியோ மீண்டும் தரப்படுவதில்லை என்பதைக் கவனத்திற் கொள்க. உதாரணமாக, கீழுதரப்பட்டுள்ள 4 வாக்கியங்களிலும் தரப்பட்டுள்ள தடித்த எழுங்கிலுள்ள சொல்/சொற்றொகுதி தொடர்பில் விளக்கத்தைச் சரியாக வழங்க முற்படுக.

• உலக பண்புகளையும், திறன்களையும் அளந்தறிவதற்கு இன்றுவரை அமைக்கப்பட்டுள்ள பல்வேறு சோதனைகள் அனைத்தும் பூரணத் தன்மை வாய்ந்தவை என நாம் கருத முடியாது.

• ஆய்வாளர்கள் தாம் பயன்படுத்தும் சோதனைகளில் அகவயக் காரணிகளின் குறுக்கீடு குறைக்கப் படுவதற்கு உதவக்கூடிய முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வது அவசியமானதாகும்.

• சமூகத்தில் பல்வேறு குழுக்களிடைய எழும் போராட்டங்களுக்கு சார்பெண்ணங்கள் பெருமளவு காரணங்களாகும் என சமூகவியலாளர்கள் கருதுகின்றனர்.

• சமூக விஞ்ஞான ஆய்வாளர்கள் முற்கோட்டங்களைப் பயன்படுத்துவதைத் தமது ஆய்வுகளின்போது தவிர்க்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

(iv) உரைப்பகுதி ஒன்றினை வழங்கி அதற்குப் பொருத்தமான கூற்றினைத் தெரிவு செய்தல். அல்லது உரைப்பகுதியின் மையக்கருத்துப் பற்றிய மதிப்பீடு.

• இவ்வாறான வினாக்களில், குறித்த ஒரு பந்தி தரப்பட்டு அதனை முறையாகக் கிரகித்து அதில் குறிப்பிடப்படும் பிரதான பிரச்சினை அல்லது கருத்து எதுவென்பதை அறிந்த பின்னர் அதன் கீழே தரப்பட்டிருக்கும் மூன்று கூற்றுக்களில் பந்தியுடன் நன்கு பொருந்தக்கூடிய விடையைத் தெரிவு செய்து வினாவினதும், விடையினதும் இலக்கத்தினை எழுதுமாறு கேட்கப்படும்.

(v) தரப்பட்ட பத்தியொன்றிலிருந்து அனுமானிக்கக் கூடிய முடிவு (கூற்று) தொடர்பில், தரப்பட்டுள்ள மாற்று விடைகளினொன்றைத் தெரிதல். உண்மை, பொய், சந்தேகம் அல்லது கூற முடியாது ஆகிய மூன்று மாற்று விடைகளிலொன்றுக்கு வருதல்.

• இவ்வாறான வினாக்களுக்கு விடையளிப்பதில் முறையான பயிற்சியைப் பெற்றிருக்க வேண்டும்.

• தரப்பட்டது ஒரு பத்தியாகவோ அல்லது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தரவுகளாகவோ இருக்கலாம். இவற்றிலிருந்து முடிவு (கூற்று) தொடர்பில் கவனமாக அணுக வேண்டும்.

• தரப்பட்ட பத்தியிலுள்ள தரவுகளுக்கு அமைவாக தெரிவு செய்யப்படும் கூற்று இருப்பது தொடர்பில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

• பந்தி எது பற்றியதாகவும் இருக்கலாம். அதுபற்றி உங்களுக்கு முன்னறிவு இல்லாமலும் இருக்கலாம். உண்மையில் இவ்வாறான வினாக்களில் பரீட்சார்த்தியின் தர்க்கியல் சார்ந்த நியாயதிக்கம் மூலமே மதிப்பிடப்படுகிறதே ஒழிய நீங்கள் கற்றுள்ள அறிவைப் பரீட்சிக்கும் நோக்க அடிப்படை இல்லை என்பதையும் கவனிக்கவும்.

• இவ்வினாவுக்கு விடையளிக்கும்போது பொதுவாகப் பின்வரும் அடிப்படையைப் பின்பற்ற வேண்டும்.

• உண்மை/ஆம்: கூற்றானது பந்தியில் தரப்பட்டுள்ள தகவல்களைத் தர்க்க ரீதியாகத் தொடரும் எனின் 'உண்மை' என்ற முடிவுக்கு வரவேண்டும். ஒரு கூற்று உண்மையென முடிவு செய்வது, தரப்பட்ட பந்திக்கமைவாக இரு வழிகளில் அமையலாம். அவற்றைத் தெளிவாக இனங்கண்டு எழுத வேண்டும்.

• பொய்/இல்லை: கூற்றானது பந்தியில் தரப்பட்டுள்ள தகவல்களைத் தர்க்க ரீதியாகத் தொடராதவிடின் 'பொய்' என்ற முடிவுக்கு வரவேண்டும். (முரண்பாடு - சொல்தொற்றொடர்/சந்தர்ப்பமற்ற - ஊகிப்பு - அனுமானம் - கூற்று)

• கூற முடியாது: பந்தியில் தரப்பட்டுள்ள தகவல்களை மாத்திரம் வைத்து குறித்த கூற்றினைப் பெற முடியாது எனின் 'கூற முடியாது' என்ற முடிவுக்கு வரவேண்டும். (இவைதொடர்பான விளக்கங்கள் நேரடிக் கலந்துரையாடலில் விரிவாகத் தரப்படும்.)

மிக விரைவாகத் தரப்பட்ட காலத்துக்குள் விடைகளை முடிவுறுத்த வேண்டும். மேலும் விடையுடன் காரணமும் கேட்கப்படின், உரியவாறு தர்க்க நியாயத்தைக் குறிப்பிட வேண்டும்.

கிரகித்தல் வினாத்தாளை அணுகுவதற்கு கவனிக்க வேண்டிய பொதுவான விடயங்கள்:

• விடையளிக்க வேண்டிய வினாக்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்ளுதல்.

• காலம் தொடர்பில் (Duration) கவனம் செலுத்துதல்.

• தரப்பட்ட பந்தியின் அமைப்பினை அறிதல். முக்கிய சொற்களை அடையாளம் காண வேண்டும். பரீட்சார்த்தி சொல்லாளுகையைச் சரியாகப் பிரயோகிக்க வேண்டும். பந்திகளில் கையாளப்படும் சொல் அல்லது சொற்றொகுதி வினாவாயின் விடை தவறாகி விடும். இது பரீட்சார்த்தி சுயமாகத் தனது பல்லுரைசார் வாசிப்பின் ஊடாக மட்டுமே விருத்தி செய்து கொள்ள முடியும்.

• வினாவை விளங்கிக் கொள்ளுதல். மிக வேகமாக மூன்று முறை வாசிக்கவும். வேகமும் விளங்கும் திறனும் ஈடுபாடும் மிக அவசியம். வாசிப்பின்போது வரிவரியாக வாசிக்கவும். (கதைப் புத்தகம் வாசிப்பது போலல்ல). விடை எங்குள்ளது என அறிவதற்காக வினாவை மனதில் வைத்து வாசிக்க வேண்டும். பந்தியின் போக்கு, அமைப்பு, பிரதான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுக்கவும். எனவே முதலில் வினாக்களை வாசிக்கவும். பின்னர் பந்திக்குச் செல்லவும்.

• சுருக்கமாக்கும் போது மிக அற்பமான அல்லது சிறிய விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கத் தேவையில்லை. பிரதான கருத்தே முக்கியம். உதாரணங்களிலும் விளக்கங்களிலும் அதிகளவு கவனம் தேவையில்லை.

• வினாக்களுக்கு விடையளிக்கும்போது, சரியான விடை பந்திக்கு வெளியில் வருமா? பந்திக்கு அப்பால் சிந்திக்க வேண்டி ஏற்படுமா?

• குழப்பமான, தூண்டுகின்ற வார்த்தைகளைப் பெரிதும் கவனிக்கத் தேவையில்லை.

• வாசிக்கும் போது தேவைக்கேற்றவாறு மிகச் சுருக்கமாகக் குறிப்பெடுக்கவும்.

• வாசித்துக் கொண்டிருக்கும் போதே தமது முன்னறிவு, பகுப்பாய்வு ஆற்றலுக்கேற்ப முன்கூட்டியே வினாக்களைத் தீர்மானித்துக் கொண்டே விடையளித்தலை இலகுபடுத்தலாம்.

• தொடக்க, இறுதிப் பந்திகளில் கூடிய கவனம் செலுத்துதல்.

• பரீட்சார்த்தி வினாத்தாளைப் பார்த்துக் குழப்பமடையக் கூடாது பொறுமையின்மையும், அவசரப்படுவதும் விடையளிக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தும். ஏனெனில் பரீட்சையின் பிரதான பிரச்சினை படிப்பது மட்டுமல்ல. இவ்வாறான நிலைகளுக்குட்படாதிருத்தலும் மிகமிக முக்கியமாகும். இவ்வினாத்தாள் 1½ மணி நேரத்துக்குட்பட்டது என்பதால் உங்கள் கவனத்தை மனக்குழப்பமின்றிக் கையாள வேண்டும். நேரத்தை அடிக்கடி பார்க்கத் தேவையில்லை. வினாத்தாளைப் பார்த்துப் பதற்றப்பட வேண்டியதில்லை. வினாத்தாளைப் பெற்றவுடன் முதலாம் வினாவைத் தான் பார்க்க வேண்டுமென்றுமில்லை. பொதுவான பார்வை ஒன்றினை வினாக்களின் மீது முதலில் செலுத்த வேண்டும். அமைதி யாகவும் முடிந்தவரை விரைவாகவும் உங்கள் பயிற்சியையும், அனுபவத்தையும் பரீட்சை மண்டபத்தில் முன்னிறுத்திச் செயற்பட வேண்டும். இவற்றை இவ்விடத்தில் கூறுவதற்குக் காரணம், பலர் வினாக்களுக்கு சரியாக விடையளிக்க முடியாமல் போனது இவ்வாறான பதற்ற நிலையினால் தான் என்பதற்காகவே இங்கு குறிப்பிடுகிறேன்.

• விளக்க வகுப்புக்கள் மூலம் அனைத்து விடயங்கள் தொடர்பில் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும்.

"வாசிக்க வேண்டும் என்பதற்காக வாசிப்பதல்ல; கிரகிப்பதற்காக வாசிக்கப்பட வேண்டும்."

 

SLEAS பரீட்சை ஊடாக தெரிவுக்குள்ளாகுவதற்கு எதிர்பார்த்திருக்கும் அனைவருக்கும். நேரம் எடுத்து வாசிக்கவும்.

SLEAS பரீட்சை வழிகாட்டல் - 01

(மூலம்: வலம்புரி - 14.05.2022)

By செல்வரட்ணம் சந்திரராஜா SLEAS-1 

கருத்துரையிடுக

0 கருத்துகள்