18 வயதுக்குட்ட ஒருவர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் என்ன சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்?

 இலங்கையில் 18 வயதுக்குட்பட்ட ஒருவர் வாகனம் ஓட்டி, அதன் மூலம் ஒருவருக்கு மரணம் அல்லது காயம் ஏற்படுத்தினால், அது மிகவும் பாரதூரமான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும்.


​1. குற்றவியல் பொறுப்பு (சிறுவர் மீதான நடவடிக்கை) -
​இலங்கையின் மோட்டார் போக்குவரத்துச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் பின்வரும் குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக சுமத்தப்படும்:
(I). பத்திரமற்ற (License) வாகனம் செலுத்துதல்: இலங்கையில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 18 ஆகும். எனவே, அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
(II)​. அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல் (தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 298): சாரதி உயிரிழந்தால், "கடுமையான கவனக்குறைவு அல்லது அலட்சியத்தால் மரணத்தை விளைவித்தமைக்காக" சிறுவர் மீது வழக்குத் தொடரப்படும்.
(III)​. காயங்களை ஏற்படுத்துதல்: சாரதிக்கு காயம் ஏற்பட்டால், தண்டனைச் சட்டக்கோவையின் 328 அல்லது 329 பிரிவுகளின் கீழ் உயிருக்கு ஆபத்தை விளைவித்தமைக்காக தண்டனை வழங்கப்படும்.
​குற்றம் சாட்டப்பட்டவர் சிறுவர் என்ற அடிப்படையில் அவர் சிறுவர் நன்னடத்தை இல்லத்திற்கு (Certified School) அனுப்பப்பட வாய்ப்புள்ளது.
​2. வாகன உரிமையாளரின் பொறுப்பு (பெற்றோர்/பாதுகாவலர்) -
​வாகனத்தின் உரிமையாளர் (பெரும்பாலும் பெற்றோர்) இதற்கு நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும்.
​ ஓட்டுநர் உரிமம் இல்லாத ஒருவரை வாகனம் ஓட்ட அனுமதித்தமைக்காக வாகன உரிமையாளர் மீது மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும். இதற்கு அபராதம் மற்றும் சில சந்தர்ப்பங்களில் சிறைத்தண்டனை கூட விதிக்கப்படலாம்.
3. சிவில் வழக்கு -
​பாதிக்கப்பட்ட சாரதி அல்லது அவரது குடும்பத்தினர் மாவட்ட நீதிமன்றத்தில் நட்டஈடு கோரி வழக்குத் தொடரலாம்.
​ஓட்டுநரிடம் முறையான அனுமதிப்பத்திரம் இல்லாதபோது, காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்க மறுத்துவிடும். இதனால், பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டிய அனைத்து மருத்துவச் செலவுகள் அல்லது மரணத்திற்கான இழப்பீட்டுத் தொகை போன்றவற்றை வாகன உரிமையாளரே (பெற்றோர்) சொந்தமாகச் செலுத்த வேண்டியிருக்கும்.
​2019 ஆம் ஆண்டின் நட்டஈடுகள் சட்டத்தின்படி மரணம் ஏற்பட்டால், உயிரிழந்தவரின் குடும்பத்தின் வாழ்வாதார இழப்பு மற்றும் அன்புக்குரியவரை இழந்தமைக்காக பாரிய தொகையை இழப்பீடாகக் கோர முடியும்.
1. பொலீசார் உங்களுக்கு எதிராக Criminal வழக்கை தாக்கல் செய்வார்கள்.
2.பாதிக்கப்பட்டவர் உங்களுக்கு எதிராக Civil வழக்கை தாக்கல் செய்வார்கள்.
3. பிள்ளை நன்னடத்தை இல்லத்திற்கு (Certified School) அனுப்பப்பட வாய்ப்புள்ளது. நல்லா இருக்குற பிள்ளையும் அங்கே போய் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.
4. நட்டஈடு - மிகப்பெரிய தொகை
5. நீதிமன்றக் காவலில் வாகனம்.
6. சிறை/ அபராதம்
7. தேவையற்ற அலைச்சல்.
8. மன நிம்மதி தொலைவு.
அன்பான பெற்றோர்களே!!!
18 வயதுக்கு குறைந்த உங்கள் பிள்ளைக்கு காரையோ மோட்டார் சைக்கிளையோ ஓட்ட அனுமதிக்கும்முன் மேல் சொல்லப்பட்ட சட்ட விடயங்களை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
உங்கள் பிள்ளையால் பாதிக்கப்படப்போகிறவரும் உங்களைப்போலவே ஒரு பிள்ளையின் தந்தை, ஒரு மனைவியின் அன்பான கணவர் ஒரு தாயின் நேசத்திற்குரிய மகன்.
தயவுசெய்து பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தின் உதவியை நாடுங்கள். Police, நீதிமன்றம் என்று அலைய வேண்டாம், நேரமில்லை, காலமில்லை என்று விட்டு விடாதீர்கள்.
இன்று விபத்து நடந்து இடமானது அடிக்கடி விபத்துக்கள் நடக்கும் ஓர் Junction ஆகும், 3 மாதங்களின் முன் எனது நண்பர் ஒருவரும் அதே Junction இல் விபத்தில் சிக்கினார், கையில் இலேசானா வெடிப்பு, Police Complaint ஒன்று file பண்ணசொன்னேன் அவர் செய்யவில்லை. அப்படி அவர் செய்திருந்தால், அவ்வழக்கு நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு, சில வேளைகளில் அச் சந்தியில் விபத்துக்களை தடுப்பதற்கான ஏற்பாடுகள் எதனையும் செய்யுமாறு நீதிமன்றம் கட்டளை எதனையும் இட்டிருக்கவும் கூடும், அவ்வாறு கட்டளை ஏதும் இடப்பட்டிருந்தால் இன்றைய விபத்தும் தடுக்கப்பட்டிருக்கலாம்.
பொறுப்புள்ள குடிமக்களாக வாழ்வோம், சட்டம் அனைவருக்குமானது.. நமக்குள்ள சட்ட உரிமைகளை நாம் பெறுவோம்...
எம். ஆர். றொஸான் பிராஸ்
சட்டத்தரணி

கருத்துரையிடுக

0 கருத்துகள்